ஹூருன் என்ற சர்வதேச அமைப்பு உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹூருன் ரிச் லிஸ்ட் 2021 என்ற பெயரில் வெளியான இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 6.08 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் 8 விழுக்காட்டை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு இந்தியரான கௌதம் அதானி 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் அதானியின் மதிப்பு சுமார் இருமடங்கு உயர்ந்துள்ளது என ஹூருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பணக்கார நபராக முதலிடத்தில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கும், இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோசும் உள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் வருவாய் மூன்று மடங்கு உயர்வு - அசத்தும் ஜூம் செயலி