கோவிட்-19 பரவலுக்கு முன்னரே இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துவந்தன. விற்பனை பெருமளவு குறைந்ததால் டிவிஎஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேலையில்லா நாள்களைக் கடைப்பிடித்தன.
இந்நிலையில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன. தற்போது மெதுவாக இயல்புநிலை திரும்பிவருகிறது.
இருப்பினும், தற்போது பொருளாதாரத்தில் நிச்சயமின்மை தொடர்வதால் அத்தியாவசியமற்ற செலவுகளைத் தள்ளிப்போடவே பொதுமக்கள் விரும்புகின்றனர். அதேநேரம், பொதுமக்கள் செலவுசெய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் பல திட்டங்களை அறிவித்துவருகின்றன.
அதன்படி, கார்கள் வாங்க விரும்புவோருக்கு எளிதாகக் கடன்களை வழங்க ஏதுவாக மகேந்திரா நிதி நிறுவனத்துடன் மாருதி சுசூகி கைகோத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்கள் வசதிக்கேற்ப பல வகையான கடன்களைப் பெறலாம்.
இது குறித்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இந்தியாவில் மகேந்திர நிதி நிறுவனத்திற்கு மிகச் சிறப்பான கட்டமைப்பு உள்ளது. கிராமப்புறங்களிலும் வருமான சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கும் கடன் அளிப்பதில் மகேந்திர நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. மேலும், மாருதி நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு விற்பனை கிராமப்புற பகுதிகளில்தான் நடக்கிறது" என்றார்.
மேலும், இந்தக் கூட்டணி மூலம் மாதச் சம்பளம் பெறுபவர்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் பயன்பெறுவார்கள் என்றும் மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெருநிறுவன வரி காலக்கெடு நீட்டிப்பு? நிதியமைச்சர் சூசகம்!