ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில், சீனாவில் ஏற்பட்ட தொற்றுநோய் கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக உலகம் கடும் சரிவை சந்தித்துவருகிறது.
மேலும் கார் உற்பத்திக்குத் தேவைப்படும் உதிரி பாகங்கள், சீன நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அதிகம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் உதிரி பாகங்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
உற்பத்திக் குறைவால், விற்பனையும் குறைந்துள்ளதாகக் கார் நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்
பிப்ரவரி மாத விற்பனையில் தங்களது நிறுவனம் 42 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிவித்துள்ளது. மேலும் 32 ஆயிரம் 476 கார்கள் மட்டுமே ஒரு மாதத்தில் விற்பனை ஆகியுள்ளது. ஆனால் ஜனவரி மாதத்தில் 52 ஆயிரம் 915 கார்கள் விற்பனையாகின. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரே மாதத்தில் விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி ஒரு சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 682 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 110 கார்கள் விற்பனை ஆகியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய்
பத்து சதவிகிதம் விற்பனையில் வீழ்ச்சி என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 54 ஆயிரத்து 518 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 43 ஆயிரத்து 110 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதலால், ஆட்டோமொபைல் துறை, பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துவருகிறது.
இதையும் படிங்க: உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்யும் கொரோனா: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி