நிதிச்சுமைக் காரணமாக தடை உத்தரவிலிருந்த லட்சுமி விலாஸ் வங்கியை, சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு இன்று (நவ.25) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கடந்த ஒரு வார காலமாக கடும் வீழச்சியை சந்தித்த லட்சுமி விலாஸ் வங்கி, இன்று உயர்வைச் சந்தித்தது.
இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கதில் வங்கிப் பங்குகள் தொடர் சரிவைக் கண்டன. ஒரு கட்டத்தில் 4.79 விழுக்காடு வரை சரிந்து பங்கின் விலை 6.95 ரூபாயாக வீழ்ச்சி கண்டது. நண்பகலில் மத்திய அரசு இணைப்பு அறிவிப்பை வெளியிட்டதும் பங்குகள் உயர்வை சந்திக்கத் தொடங்கின.
இதையடுத்து, வர்த்தக நாள் முடிவில் சுமார் ஐந்து விழுக்காடு உயர்வுடன் பங்கின் விலை 7.65 ரூபாய்க்கு விற்பனையானது. நிதிச்சுமையில் சிக்கியிருந்த லட்சுமி விலாஸ் வங்கி மீது கடந்த 17ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பத்தது. இதையடுத்து, வங்கியின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மட்டும் 53 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.
இந்நிலையில், இணைப்புக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (நவ.27) முதல் இந்த வங்கி டி.பி.எஸ். வங்கி என்ற பெயரில் செயல்படத் தொடங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பு - உச்சத்தில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி