2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார சூழல் குறித்து மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்ஜீவ் சன்யால் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் வேலை இழப்பு விவகாரம் உச்சம் தொட்டது. குறிப்பாக, சுற்றுலா, வர்த்தகம், கேளிக்கை உள்ளிட்ட துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த சூழலில் தற்போது நிலைமை சீரடைய தொடங்கிவரும் நிலையில், அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் வேலை இழப்பு விவகாரத்திற்கு இந்தியா தீர்வு காணும் என நம்புகிறேன்.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதம் ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்வதை உணர்த்துகிறது.
விலைவாசி உயர்வு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகக் காணப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றமே காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Budget 2022 LIVE Updates: நாடாளுமன்றம் செல்கிறார் நிர்மலா சீதாராமன்