இந்தியாவில் முதன்முறையாக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கும் முயற்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதற்கான அனுமதி குறித்து மத்திய அரசிடம் பேசிவருவதாகத் தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் குறைந்த விலை 4ஜி டேட்டா வசதியை அறிமுகம்செய்து டேட்டா புரட்சியை மேற்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 37 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஜியோவின் வருகைக்குப்பின் மற்ற முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன்-ஐடியா ஆகியவற்றின் சந்தை ஆட்டம்கண்டுள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் கடன் காரணமாக நிதிச்சுமையில் சிக்கித் தவித்துவருகின்றன.
இதையடுத்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் ஜியோ, 5ஜி அலைக்கற்றை வசதியை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா, சீனா, தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் உள்ள நிலையில், நடப்பாண்டுக்குள் இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் சாத்தியப்படுத்தும் வேலைகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி தொழில்நுட்பத்தைக்கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியானது ரியல்மியின் அடுத்த ஸ்மார்ட்போன்கள்!