இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ நெட்வொர்க் சேவையை அறிமுகம் செய்தபின் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன்படி இணையதளம், ஃபோன்கால்கள் உள்ளிட்ட சேவைகளை மக்கள் அதிக விலைக் கொடுத்து பெற்றுவந்த நிலையில் ஜியோ நிறுவனம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மேலும், இணையதளம் உள்ளிட்ட டேட்டா சேவைகளையும் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கிய ஜியோ நிறுவனம் மக்களிடைய பிரபலமடைந்தது.
அதைத் தொடர்ந்து பெருவாரியான வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் திரும்பினர். இதனால் ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ, தற்போது நாட்டின் நம்பர் ஒன் நிறுவனமாக திகழ்ந்துவருகிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டின் (2019 - 20) மே மாதம் வரை பாரதி ஏர்டெல் 322.9 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. ஆனால் ஜூன் மாதத்தின் இறுதியில் ஜியோ 331.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. வோடஃபோன் 334.1 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் இருந்தது.
தற்போது, வோடஃபோன் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 320.38 கோடியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ளது.
வோடஃபோனுடன் ஐடியா நிறுவனம் இணைக்கப்பட்ட பின்பு 400 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திற்கு இருந்தனர். ஆனால், குறைந்த அளவு ரீசார்ஜ் கண்டிப்பாக செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்ட பிறகு தங்களது வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.