வணிகப் பிரிவு, ஈடிவி பாரத்: அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான ஜெஃப் பெசோஸ் 15.02 லட்சம் கோடி செல்வத்தை ஈட்டியுள்ளார்.
உலகளவில் முதல் முறையாக 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய நபராக இதன்மூலம் அறியப்படுகிறார். தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 1999ஆம் ஆண்டுகளிலேயே 100 பில்லியன் டாலரை கடந்து தனது சொத்து மதிப்பை வைத்திருந்தார். அப்போதிலிருந்து சில வருடங்கள் முன்பு வரை பில் கேட்ஸ் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
ஆனால் தற்போது சில ஆண்டுகளாக, அமேசான் நிறுவனர் பெசோஸ் முதலிடம் வகிக்கிறார். பில் கேட்ஸ் 124 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டு இரண்டாம் இடம் வகிக்கிறார். அமேசான் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்குகளில் 11.1 விழுக்காடு பங்குகளை, ஜெஃப் பெசோஸ் தன் வசம் வைத்திருக்கிறார்.
மார்ச் 2020 கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலகட்டத்தில், அமேசான் நிறுவன பங்குகளில் சுணக்கம் ஏற்பட்டு 1,626 டாலரைத் தொட்டது. அதைத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த நிறுவன பங்கு, தன் வாழ்நாள் உச்சமான 3,451 டாலரைத் தொட்டது. ஆகஸ்ட் 26ஆம் தேதி அமெரிக்க வர்த்தக நாளில், நிறுவன பங்கு கண்ட உயர்வைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் மதிப்பு 5.2 பில்லியல் டாலர் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 115 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், டெஸ்லா / ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் 101 பில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.