நடப்பு நிதியாண்டில், வருமான வரி செலுத்திய 1.41 கோடி பேருக்கு 1.64 லட்சம் கோடி ரூபாயை வருமான வரித்துறை திருப்பி அளித்துள்ளது.
தனிநபர் வருமான வரியில் 53,070 கோடி ரூபாயும் கார்ப்பரேட் வரியில் 1.10 லட்சம் கோடி ரூபாயும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 4ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய 1.41 கோடி பேருக்கு 1.64 லட்சம் கோடி ரூபாயை மத்திய நேரடி வரிகள் வாரியம் திருப்பி அளித்துள்ளது.
1,38,85,044 வழக்குகளில் 53,070 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2,06,847 வழக்குகளில் 1,10,946 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 4ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 5 கோடி ரூபாய் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தனிநபர் வருமான வரியை தாக்கல் செய்வதற்கு ஜனவரி 10ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.