இரு மாநில தெலுங்கு மொழி பேசும் மக்களின் நம்பிக்கைக்குரிய வங்கியாக திகழ்ந்த ஆந்திரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இனிவரும் காலங்களில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா என்றே ஆந்திரா வங்கி அழைக்கப்படுகிறது.
தெலுங்கு மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி போன ஆந்திரா வங்கி வருங்காலங்களிலும் இதேபோல் செயல்படும், தெலங்கானா மற்றும் ஆந்திரா மக்களின் நம்பிக்கைக்குரியச் சேவையைத் தொடர்ந்து வழங்கும் என்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் ராஜ்கிரண் ராய் தென்னகத்தின் முன்னணி நாளேடான ஈநாடு தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஈநாடு பத்திரிகையாளர் கேட்ட கேள்விகளுக்கு ராஜ்கிரண் ராய் அளித்த பதில்கள் வருமாறு:-
- இந்திய வங்கிகளின் அமைப்பில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் என்ன?
தொற்று நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைபடுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு மக்களையும் நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இந்த ஊரடங்கு பொருளாதாரத்தை வலுவிழக்க செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் இதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புள்ளது.
நுகர்வோர் பற்றாக்குறை காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியைக் குறைக்கும் முயற்சியில் உள்ளன. இது வருவாய் கணக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கடன் வசூலிப்பிலும் சவால்களாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, ரிசர்வ் வங்கி அனைத்து வகை கடனாளிகளுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளது. குறுகிய கால சிரமங்களை நாம் குறிப்பாக என்.பி.ஏ. (அசையா சொத்து) விஷயத்தில் தெளிவாகக் காணலாம். இதனால், நெருக்கடி முடிந்தவுடன் குறைவான சவால்களைச் சந்திப்போம் என்று நம்புகிறோம்.
- ஊரடங்கு தளர்விற்குப் பிறகு கடன் தேவை அதிகரிக்குமா? எந்தெந்த துறைகளில் இந்த தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
தனிநபர்களும் நிறுவனங்களும் முழுவீச்சுடன் செயல்படத் தொடங்கியதும் கடன்தேவை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். பெரும்பாலான சில்லரை வணிகங்களும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பணப்புழக்க பற்றாக்குறை, பணியாளர்கள் குறைப்பு போன்றவை இவர்களுக்கு கடினமாகிவிட்டது. கோவிட்-19 க்குப் பிறகு, தனிநபர் மற்றும் விவசாய கடன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். - ஆந்திர வங்கியுடனான இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கியின் நிலை என்ன? உங்களின் வளர்ச்சித் திட்டங்கள் என்ன?
இந்த இணைப்புக்குப் பிறகு நாங்கள் தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளோம். தற்போது நாங்கள் ஆயிரத்து 220 கிளைகளை ஆந்திராவிலும், 737 கிளைகளை தெலங்கானாவிலும் கொண்டுள்ளோம். உண்மையில் நாங்கள்தான் தெலங்கானாவின் மிகப்பெரிய வங்கி. ஆந்திரா தெலங்கானா இரண்டுமே வளர்ந்து வருகின்றன. இந்த இரண்டு மாநிலங்களும் எதிர்வரும் நாட்களில் எங்கள் வணிகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைத் தவிர, கட்டுமானம், நீர்ப்பாசனம் மற்றும் உற்பத்தி துறைகளில் முக்கிய வளர்ச்சி காணப்படுகிறது. இதை நாங்கள் சிறந்த வாய்ப்பாக பார்க்கிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு விவசாய மற்றும் நகைகடன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கிறோம். சில்லறை மற்றும் கார்ப்பரேட் கடன்களிலும் கவனம் செலுத்துகிறோம். பல தசாப்தங்களாக, தெலுங்கு மக்கள் ஆந்திர வங்கியுடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளனர். அதே நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். - இந்த இணைப்பு சுமூகமானதாக இருந்ததா அல்லது ஏதேனும் சவால்களை எதிர்கொண்டீர்களா? சவால்கள் இருப்பினும் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?
100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மூன்று வங்கிகள், 9 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 75 ஆயிரம் ஊழியர்களை ஒன்றிணைக்கும்போது நிச்சயம் இதில் சவால்கள் உள்ளன. இணைப்புக்கு சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அறிவிப்பு வந்தது. சிரமங்கள் இருந்தபோதிலும், இந்திய வங்கி அமைப்பில் இதுஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பயனுள்ள திட்டமிடல் போன்றவை இந்தச் செயல்முறையை மென்மையாக்கியுள்ளன.
வீடியோ கான்பரன்சிங் மூலம் மிக முக்கியமான கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். எங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க சில டிஜிட்டல் தளங்களை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். - கிளைகள் அல்லது ஏடிஎம்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளீர்களா?
இந்த நேரத்தில், இல்லை. தற்போது, நாடு முழுவதும் 9 ஆயிரத்து 500 கிளைகளும் 13 ஆயிரத்து 500 ஏடிஎம்களும் உள்ளன. எதிர்காலத்தில் கிளைகளின் எண்ணிக்கையை குறைக்க நாங்கள் திட்டமிட்டால், செயல்படும் பகுதி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து அம்சங்களையும் நாங்கள் நிச்சயமாக கருத்தில் எடுத்துக்கொள்வோம்.
எடுத்துக்காட்டாக, இணைப்பிற்குப் பிறகு, யூனியன் வங்கியில் 700 கிளைகள் உள்ளன. அவை ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுகளிலேயே உள்ளன. இந்திய யூனியன் வங்கி கிளையுடன், அதே சாலை அல்லது கட்டடத்தில் ஆந்திர வங்கி அல்லது கார்ப்பரேஷன் வங்கி கிளைகளும் உள்ளன. அவற்றை ஒரு யூனிட்டாக இணைக்க அல்லது எங்கள் சேவை கிடைக்காத மற்றொரு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஏடிஎம்களுக்கும் இதே நடைமுறையை நாங்கள் பின்பற்றுவோம். முழு செயல்முறைக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம். - நடப்பு நிதியாண்டிற்கான உங்கள் இலக்குகள் என்ன?
இந்த இணைப்புக்குப் பிறகு, இந்திய யூனியன் வங்கி இந்தியாவின் 15வது பெரிய வங்கியாக மாறியுள்ளது. நாங்கள் 15 லட்சம் கோடி மதிப்பிலான வணிகம் செய்கிறோம். இதில் ரூ .6.5 லட்சம் கோடி கடன்களும் அடங்கும். நடப்பு நிதியாண்டில் கடன் வழங்கலில் 9 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். வங்கி என்.பி.ஏ தற்போது 6.5 சதவீதமாக உள்ளது. கடன் வசூல் மற்றும் கடன் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் அதை 6 சதவீதமாகக் குறைக்க முயற்சிக்கிறோம். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மூவாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களை வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு ஈநாடு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் ராஜ்கிரண் ராய் கூறினார்.
இதையும் படிங்க: நாடு முடக்கம்: ஜிடிபியில் பெரும் பங்களித்த தொலைத்தொடர்பு துறை!