தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு நமது வீடுகளில் ஏதேனும் பொருட்கள் பழுதடைந்தால் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நபர்களையே உதவிக்கு அழைப்போம். அவர்கள் பிற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சாவகாசமாக வந்து நமக்கு உதவுவார்கள். ஆனால், இன்று கதையே வேறு. யாருக்கும் யாரும் காத்திருக்க வேண்டாம். அர்பன் கிளப், ஜஸ்ட் டயல், சுலேகா உள்ளிட்ட செயலிகள் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன.
பல துறை சார்ந்த தொழிலாளர்கள், இது போன்ற செயலிகள் வாயிலாக வீட்டுக்கே வந்து உடனடியாக வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். மர வேலைகள், வீட்டு வேலை என எல்லாவற்றுக்கும் இதன் வழியாக பதிவு செய்யப்படுகிறார்கள். இதைப் போல, பயணங்களின் ஏற்பாடுகளும் மேம்பட்டுள்ளன. முன்னதாக, நிறுவனங்களிடம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, வாடகைக்கு கிடைக்கும். இப்போது, அதற்கும் ஓலா, உபேர் போன்ற செயலிகள் வந்துவிட்டன.
இவை மட்டுமல்ல, உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள் என அனைத்தையும் இணையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தின் அபரிமிதமான வளர்ச்சி. இந்த செயலிகளால், நிறைய வேலை வாய்ப்புகளும் உண்டாகியுள்ளன. உதாரணமாக, ஸ்விகி, சொமேட்டோ போன்ற உணவு பொருட்களை வீட்டிற்கு வந்து சேர்க்கும் செயலிகளைக் கூறலாம்.
இதுபோல பகுதி நேரமாக வேலை செய்பவர்களை அமெரிக்காவில் 'ஜிக் ' ஊழியர்கள் என்பார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தொழில் துறைகளிலும் கணக்கிடுகையில் ஜிக் பணியாளர்கள் 33 லட்சம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 61 லட்சமாக உயரவும் வாய்ப்பிருக்கிறது. இதில், 55 விழுக்காடு பேர் வங்கி, இன்சூரன்ஸ், ஐ.டி., ஐ.டி.ஈ.எஸ் ஆகிய துறைகளில் பணி புரிபவர்களாக இருப்பார்கள்.
என்னென்ன நிறுவனங்கள்:
- உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி 2.10 லட்சம் ஊழியர்களுடன் இணைந்து செயல்படுகிறது. கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஓலா, உபேர் உள்ளிட்ட போக்குவரத்து சார்ந்த நிறுவனங்கள் சுமாராக 15 லட்சம் ஊழியர்களுடன் செயல்படுகிறது.
- திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள், கடைநிலை பணியாளர்களான குழாய் பழுது பார்ப்பவர், மரவேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல ஊழியர்களை பகுதிநேரமாக, முழுநேரமாக (அ) குறிப்பிட்ட நேரமென தேவைக்கேற்ப இணையத்தில் பதிவு செய்யலாம்.
- டிசிஎஸ், விப்ரோ, இன்போஸிஸ், ஹெச்.சி.எல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜிக் பணியாளர்களை, கட்டடக் கலை, ரோபோட்டிக் உள்ளிட்ட அதிக போட்டி நிறைந்த துறைகளில் பயன்படுத்துகின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து ஐ.எஸ்.எப் ( The Indian Staffing Federation) 2018ஆம் ஆண்டு எடுத்த ஆய்வில், ஐ.டி, ஐ.டி.ஈ.எஸ் ஆகிய துறைகளில் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிவதாகத் தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டு இந்தத் துறையில் 7 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர் பணிபுரியக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பகுதிநேர வேலை:
அமெரிக்கா, சீனா, பிரேசில் , ஜப்பான் ஆகிய நாடுகளைப் போலவே பகுதிநேர வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை உருவாக்குவதில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐ.எஸ்.எப் அமைப்பு கணிப்பின்படி, ஹரியானா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பகுதிநேர தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயரும்.
மாத ஊதியம், தொழிலாளர் நலத்திட்டம் (போனஸ், பி.எஃப் உள்ளிட்டவை) ஆகியவற்றை பொறுமையாக முதலீடு செய்து வேலை முடிப்பதற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தொகையை நிர்ணயித்து வேலையை முடிப்பது சுலபம். தொழிலாளருக்கென எவ்வித தனி சலுகைகளும் வேண்டாம். இந்தியாவில், 70 விழுக்காடு ஃப்ரீலான்ஸ் வேலை சூடுபிடித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். தொடர்ச்சியான, பொருளாதார பின்னடைவுகூட காரணமாகயிருக்கலாம்.
”தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் ஃப்ரீலான்ஸர் பணி என்பதே கிடையாது. இதனால் , நிறுவனங்கள் எப்போது நினைத்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த ஃப்ரீலான்ஸர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை நிறுத்திக் கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவில், ஒப்பந்த பணியாளர்களின் நிலையை மேம்படுத்த சமூக பாதுகாப்பு வழங்க வழி வகை செய்துள்ளது. இந்த மசோதா உணவு விநியோக நிறுவனங்கள் வர்த்தகம், உபேர், ஓலா போன்றவற்றில் பணி புரியும் பகுதி நேர தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பானது. இவர்களுக்கு இன்சூரன்ஸ், விபத்து காப்பீடு போன்றவற்றை வழங்க மத்திய அரசு அந்தந்த நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. இந்த ஊழியர்களின் நலனுக்காக சமூக பாதுகாப்பு நிதியை உருவாக்கவும் முடிவு செய்தது. இருப்பினும், இந்த மசோதாவில் குறைந்தளவு ஊதியம், உடல்நலக் குறைவு விடுமுறை, விடுப்பு அளிப்பது தொடர்பான விதிகள் இடம் பெறாதது மிகப் பெரிய பின்னடைவாகும்”
இன்றைய நிலைமையில், நான்கில் ஒரு ஃப்ரீலான்ஸ் ஊழியர் இந்தியாவைச் சேர்ந்தவர். புதிய நிறுவனங்களை தொடங்கும், ஸ்டார்ட்-அப் கலாசாரமே இதற்கு அடிநாதம். இந்த வேலை இலகுவாக இருப்பதும் மற்றொரு காரணம். இதற்கிடையே, ஃப்ரீலான்ஸ் ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் காலம் தள்ளுகிறார்கள் என்ற தவறான நம்பிக்கையும் உள்ளது. பே பால் எடுத்த கணக்கெடுப்பில், ஒரு ஊழியர் ஃப்ரீலான்சராக ஈடுபடுவதால் 20 முதல் 60 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள் என்பது அமைப்பு சார்ந்த முழுநேர ஊழியரை திடுக்கிட வைக்கிறது.
2018ஆம் ஆண்டு ஜிக் ஊழியர்கள் சந்தை மதிப்பு அமெரிக்காவில், 20 ஆயிரத்து 400 கோடி டாலரை எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு மதிப்பு 45 ஆயிரம் 500 கோடி டாலராக உயருமெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இந்தியாவில் ஃப்ரீலான்ஸ் பணியாளர்களின் சந்தை மதிப்பு 3 ஆயிரம் கோடி டாலராகும். இதன் இந்திய மதிப்பு 2 கோடி10 லட்சம்.
எந்தெந்த துறையில் பகுதிநேர வேலை செய்யலாம்?
தொழில்நுட்பத்தில் தனித்திறமை வாய்ந்தவர்களே இணையத்தில் அதிக வருவாய் ஈட்ட முடியும். ஒருவேளை அந்தத் துறையில் பலவீனமாக இருப்பவர்கள், தனித்துவமான சிந்தனை ஆற்றல் இருந்தால் வேலைவாய்ப்பு பெற முடியும். விளம்பரத் துறை, கட்டுரை எழுதுவது, வலைதள வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் க்ரியேட்டிவாக (தனித்துவம்) சிந்திப்பவர்களுக்கு வாய்ப்பு கொட்டி கிடக்கிறது. அதுதவிர, செல்ஃபோன் பழுது நீக்கம், வெப் டிசைனிங், இணையதள ஆய்வு, டேட்டா என்ட்ரி ஆகியவற்றிலும் ஃப்ரீலான்சராக பணிகள் கிடைக்கின்றன. இதுபோன்ற வளர்ச்சி எல்லா ஃப்ரீலான்சர்களுக்கும் அமைவதில்லை.
சந்தைப்படுத்தும் தொழிலில் இருப்பவர்களுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருப்பதால் அந்தத் துறையில் முயற்சிக்கலாம். விற்பனைத் துறையில், விற்பனை பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போது, 20 முதல் 45 விழுக்காடுவரை ஜிக் ஊழியர்களாக மாறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இளம் வயதினரே அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
நடனம், இசை, கல்விக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவையும் இணையத்தில் கற்று தர முடியும். ஆனால், நிரந்தர வருமானம் இல்லை. திறமைக்கேற்ற பலனை மட்டுமே எதிர்பார்க்க முடியும். தற்போதைய வேலையில்லா திண்டாட்டத்தில், பகுதி நேர வேலையாவது கிடைக்கிறதே என நினைத்தால் மட்டுமே இந்தத் துறையில் முன்னேற முடியும். இதனால், ஒரு வேலை பார்த்துக்கொண்டே மற்றொரு வேலையையும் தொடர முடியும். அதனால், வருமானங்களை அதிகரிக்கலாம்.
நகரங்களில் அலுவலக வேலையில் ஈடுபட்டுள்ள அதிகபட்சமானவர்கள் இன்று ஸ்விகி, ஓலா உள்ளிட்ட செயலிகளில் பகுதி நேர பணியாளராக இருப்பதை காண முடிகிறது. இதனிடையே, 2018ஆம் ஆண்டு ஓலா, உபேர் ஓட்டுநர்கள் சம்பளம் குறைவாக கொடுப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய செயலிகளில் பெண்களும் பெருமளவில் பயன்பெறுகிறார்கள். வீட்டிலிருந்தே செய்ய வேண்டிய வேலைகளை அதிகம் தேர்வு செய்கிறார்கள். இதில் சமையல் தொடர்பான காணொலிகள் முன்னிலை வகிக்கின்றன. தற்போது, யூடியூப் போன்ற தளங்களிலும் இதற்கு அதிக வரவேற்பை காண முடிகிறது. சிறு, பெரும் நகரங்களில் ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் வழியாக சம்பாதிக்க முடிகிறது. நானி ஹர் போன்ற செயலிகள் வீட்டில் சமைக்கும் உணவினை ஸ்விகி, சோமாட்டோ ஆகியவற்றோடு இணைத்து விநியோகிக்க உதவுகிறது. இதற்காக கிளவுட் கிச்சன் முறை பயன்படுத்தப்படுகிறது.
2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபெல் ஃபுட்ஸ் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட கிளவுட் கிச்சன்களுடன் இணைந்து 2 ஆயிரத்து 200 உணவங்களுக்கு உணவை விநியோகித்தது. இந்த இணைய பரிமாற்றம் மூலம், உணவு விநியோகிக்கும் செயலிகள் பெருமளவில் லாபமடைந்தன. இத்தகைய கிச்சன்களின் சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். இதைப் போல், ஆயிரம் கிளவுட் கிச்சன்களை உருவாக்கியுள்ளது, ஸ்விகி. இதற்கு மட்டும் 250 கோடி ரூபாயை ஸ்விகி நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இயந்திரம் தொடர்பான துறைகள், நுண்ணறிவுத் துறைகள், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளும் பகுதி நேர ஊழியர்களைத் தேடுகிறது. 2018ஆம் ஆண்டில், ஓலா, ஆக்ஸிஸ் வங்கி, இன்போஸிஸ் உள்ளிட்ட 110 நிறுவனங்கள் தற்காலிக வேலைக்கு விண்ணப்பித்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பின்னணியை ஆய்வு செய்ததாக அறிவித்தது.
இதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. இப்போது அப்படியில்லை. இத்தனை முன்னேறியிருந்தாலும், இந்திய இளைஞர்கள் நிரந்தர வேலைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், நடைமுறையில் நூறு விழுக்காட்டில் 56 விழுக்காடு பகுதி நேர பணி வேலை வாய்ப்பாகத்தான் உள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி(டிஜிட்டல்), இதுவரை இருந்த அமைப்புகளை மாற்றுகிறது. நிரந்தர பணியாளர்களுடன் கட்டமைக்கப்பட்ட அமைப்பு நிறுவனங்களை, அமைப்பு சாரா நிறுவனமாக நிறுவுகிறது. அமைப்பு சாரா நிறுவனம் எவ்வித சலுகைகளும் இல்லாமல், செலவினங்களை குறைக்கும் முறையை விரும்புகிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உபேர் போன்ற நிறுவனங்களில் பணி புரியும் பகுதிநேர ஊழியர்கள், முழுநேர நிறுவனத்தின் ஊழியர்கள் போல நடத்தப்பட வேண்டுமென மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும் பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தளவு உரிமை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனை, முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் பகுதி நேர ஊழியர்களுக்கு, சமூக பாதுகாப்பு, உரிய அங்கீகாரம் வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். யாராக இருந்தாலும் உழைப்பு ஒன்றுதான். எனவே, உழைப்புக்கேற்ற உரிமையை வழங்க வேண்டும். அதுவே, அறமும்கூட.
இதையும் படிங்க: யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்