இந்தியாவின் ரயில் போக்குவரத்து சேவைகளை மத்திய ரயில்வேத்துறைக்கு கீழ் இயங்கிவரும் இந்தியன் ரயில்வே அளித்து வருகிறது. ரயில்வேயின் நிர்வாக வசதிக்காகவும், வணிக மேலாண்மைக்காகவும் ரயில்வேத்துறையில் தனியாரின் பங்களிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. ரயில்நிலையங்களின் பராமரிப்பு, உணவு மற்றும் உபசரணை சார்ந்த செயல்பாடுகள் தனியார் நிறுவனங்கள் செய்துவருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்து சேவை வரும் ஆக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. டெல்லி லக்னோ இடையே பயணிக்கவுள்ள தேஜாஸ் விரைவு ரயிலை ரயில்வேயின் தனியார் அமைப்பான ஐ.ஆர்.சிடி.சி. 5ஆம் தேதி முதல் இயக்கவுள்ளது. அதன் தொடர்ச்சியாக மும்பை அகமதாபாத் இடையே இரண்டாவது தனியார் சேவைத் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தகட்டமாக இந்தியா ரயில்வேயின் 50 முக்கிய வழித்தடங்கள் கண்டறிந்து தேர்வுசெய்யப்பட்டு அதன் செயல்பாடுகளைத் தனியாரிடம் தர இந்திய ரயில்வே பரிசீலனை செய்துவருகிறது. நேற்று, இந்திய ரயில்வே நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக ரயில்வேத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளும், செயல்திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் மத்திய அரசு; குறைகிறதா பொதுத்துறை பங்குகள்?