கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் ரூபாய் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
இருப்பினும், பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் இந்தியப் பொருளாதாதரத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிதியாண்டில் பொருளாதாரம், 10 விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் என்று முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுபாஷ் சந்திர கார்க் தனது ப்ளாக் (blog) பக்கத்தில், "கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் உண்மையான மதிப்பு வெறும் 1.5 லட்சம் ரூபாய் கோடி மட்டுமே. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.7 விழுக்காடு மட்டுமே.
பொருளாதாரம் 40 ஆண்டுகளுக்குப் பின், 2020-21ஆம் நிதியாண்டில் சரிவைச் சந்திக்கும். இந்தச் சரிவு மிகவும் பெரியதாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 விழுக்காடு வரை, அதாவது 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பொருளாதரம் சுருங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வளர்ச்சியை (நான்கு விழுக்காடு) அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று வாரங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு அசாதாரண நம்பிக்கையை மக்கள் மனதில் மத்திய அரசு ஏற்படுத்தியதாகவும், குறைந்த அளவு மக்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோதே, இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கும் பல சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் கணித்துள்ளன.
இதையும் படிங்க: 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு: மோடியின் இன்னொரு மாயை - அஹ்மத் படேல் சாடல்