இன்று நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழச்சியில் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல், இந்தியா உலகத்துடன் ஒத்திருப்பதே சிறப்பானதாக இருக்கும் என்று 5ஜியில் இந்தியாவுக்கென தனி தொழில்நுட்பம் உருவாக்கப்படும்பட்சத்தில் அது அழிவையே தரும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கோபல் விட்டல் கூறுகையில், "இந்தியா 5ஜி சேவையில் தனக்கென தனியொரு தரநிலையையும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற பேச்சு சில காலம் நிலவிவருகிறது. இது ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இது இந்தியாவை உலகளாவிய அமைப்பிலிருந்து வெளியேற்றும், புதுமையான கண்டுபிடிப்புகளின் வேகத்தை குறைக்கும். இது நடந்தால் நமது நாட்டு மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்" என்றார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, "இந்தியாவில் அடுத்தாண்டு பிற்பாதியில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். ஜியோவின் 5ஜி சேவை என்பது உள்நாட்டின் மிக சிறந்த நெட்வொர்க், சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டதாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடிக்கும் விதமாகவே கோபல் விட்டலின் பேச்சு அமைந்திருந்தது.
தனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக, "நமது நாட்டில் மொபைல் சேவையில் சில காலம் முன்புவரை ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.ம்.ஏ. தொழில்நுட்பங்கள் இருந்தன. சி.டி.எம்.ஏ. மிகச்சிறந்த ஒருதொழில்நுட்பம். ஆனால் வெற்றிபெற்றது என்னவோ ஜி.எஸ்.எம். உலகளவில் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
இதேபோல 5ஜி சேவையிலும் நாம் சர்வதேச அளவில் இருக்கும் தொழில்நுட்பத்திற்கு இணக்கமான வகையில் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்தியாவால் தொழில்நுட்ப வேகமாக ரீதியாக வளர முடியும்" என்றார்.
இதையும் படிங்க: இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவை - அதிரடி காட்டும் அம்பானி