சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் சாம்சங், ஆப்பிள், ஹுவாய், ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்கும்பட்சத்தில், இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் சீனாவை பின்னுக்கு தள்ளும். சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 83 விழுக்காடு இந்த ஐந்து நிறுவனங்களிடம்தான் உள்ளன.
இவை இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான முதலீடுகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும், மின்சாரத்திற்கு அதிக கட்டணம், அதிக வரி, வியாபாரம் செய்ய ஏதுவான சூழல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவால் போட்டியிட முடிவதில்லை.
"தொழில் தொடங்க முக்கிய பிரச்னைகளாக இருக்கும் இந்த சிக்கல்களுக்கு நீண்டகால நோக்கில் ஒரு தீர்வை இந்தியா தர வேண்டும். குறுகிய காலத்தில், இந்தியாவிலுள்ள சட்டத்தால் பாதிப்படையும் நிறுவனங்களுக்கு உலக வர்த்தக அமைப்பு பரிந்துரைத்தபடி சில சலுகைகளை வழங்கலாம்" என்பதே துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாகவுள்ளது.
ஸ்மார்ட்போன் மற்றும் அதன் உதிரி பாகங்களின் இறக்குமதியை குறைக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தயார் நிலையிலுள்ள ஸ்மார்ட்போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்தியா அதிக வரியை விதித்துவருகிறது.
இந்த வரி விதிப்பு குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. இதன் காரணமாக தயார் நிலையிலுள்ள ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி என்பது குறைந்து, இந்தியாவிலேயே ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வது அதிகரித்துள்ளது. இருப்பினும், அதிக தேவை காரணமாக மற்ற எலக்டிரானிக் பொருள்களான சார்ஜர்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், "இந்தியா தற்போதுவரை ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், இதில் விடுபட்டுப்போன ஒரே விஷயம், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களை ஈர்க்க அரசு முறையான கொள்கையை வகுக்காதது. அத்துடன் சேர்ந்து முறையான உள்கட்டமைப்பை நாம் ஏற்படுத்திவிட்டால், ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா எளிதில் முதல் இடத்தை பிடிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான்கு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு - விரைவில் வரவிருக்கும் அட்டகாசமான வாட்ஸ்அப் வசதி