சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்துவருவதாக நடப்பாண்டு வரி தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 31 லட்சம் கோடி ரூபாய் இழப்பை உலக நாடுகள் சந்தித்துவருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பானது, உலகம் முழுவதும் பணியாற்றிவரும் 3.4 கோடி செவிலியரின் ஆண்டு வருமானத்திற்குச் சமமாகும். இந்தியாவின் ஜிடிபியில் 0.41 விழுக்காடான மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களால் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களும் தனி நபர்களால் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வரி ஏய்ப்பு நிகழந்துள்ளது.
சுகாதாரத்திற்கு ஒதுக்குவதில் 44.70 விழுக்காடு நிதிக்கு இணையாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கல்விக்குச் செலவிடுவதில் 10.68 விழுக்காடு நிதிக்கு இணையாக வரி ஏய்ப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் பணிபுரியும் 42.30 லட்சம் செவிலியரின் ஆண்டு வருமானத்திற்கு இணையாக இழப்பு நிகழ்ந்துள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டின் காரணமாக இந்தியாவில் சட்டவிரோத பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அதற்கு மொரீசியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளே முக்கியக் காரணம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.