சர்வதேச அளவில கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. கரோனா பாதிப்பின் எதிரொலியாக உலகளவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் கச்சா எண்ணெய் தேவை வெகுவாகச் சரிந்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து எண்ணெய் உற்பத்தி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டு சூழலைச் சீராக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், நேற்று அமெரிக்க சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்து விலை பூஜ்ஜியத்துக்கும் குறைவாகச் சென்றது. நேற்றைய சந்தை வர்த்தக முடிவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் -35.34 டாலராக விற்பனை ஆனது.
சர்வதேச நாடுகளை கச்சா எண்ணெய்க்காகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும்விதமாக அமெரிக்கா ஷேல் காஸ் உற்பத்தியை மேற்கொள்ளத் தொடங்கியது. தற்போது நிலைமைத் தலைகீழாக மாறி கச்சா எண்ணெய் விலை பாதாளத்தைத் தொட்டதால் அமெரிக்காவில் ஷேல் காஸ் உற்பத்தியை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் இடர் எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்தச் சூழலை அரசு சாதகமாகப் பயன்படுத்தி நிதி வருவாயை பெருக்கும் நோக்கில் விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.
இதையும் படிங்க: கரோனாவைக் கையாள மாநில அரசுகளுக்கு ரூ.46,038 கோடி - மத்திய நிதி அமைச்சகம்