மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய அவர், மத்திய அரசும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணைந்து 9,257 கோடி ரூபாய் மூலதனத்தை ஐடிபிஐ வங்கிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம் அந்த வங்கி பலம் பெற்று வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என கூறினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியில் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களும், 18 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 800 கிளைகளை அந்த வங்கி கொண்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகள் எல்.ஐ.சியிடமும், 47 சதவிகித பங்குகள் மத்திய அரசிடமும் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.