2019-2020ஆம் ஆண்டிற்கான நாட்டின் நிதிநிலை அறிக்கையை புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது. வரும் ஜூலை 5ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சுகாதாரத்துறையின் முக்கியத்துவம்:
நாட்டின் ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த வளர்ச்சியை அளவீடு என்பது சுகாதாரத்துறையை மையப்படுத்தியே உள்ளது. குறிப்பாக இந்தியா, உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாகவும், பொருளாதாரத்தில் 5வது பெரிய நாடாகவும் உள்ளது. இருப்பினும் இந்தியா பொது சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இன்றும் கிராமப்புறங்களில் கர்ப்பிணிகள் மகப்பேறு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்வதும், அண்மையில் பீகாரில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் உயிரிழப்பும் இந்தியாவின் சுகாதார சிக்கலுக்குச் சிறந்த உதாரணம்.
குறைந்த அளவிலான சுகாதார உட்கட்டமைப்பு:
2016ஆம் ஆண்டு வெளியான கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் படி, பொது சுகாதார சேவை மையங்கள் 22 விழுக்காடு குறைவாகவும், துணை சுகாதார நிலையங்கள் 20 விழுக்காடு குறைவாகவும் உள்ளது. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை உலக சுகாதார மையத்தின் பரிந்துரையைக் காட்டிலும் 4 மடங்கு குறைவாக உள்ளது.
பட்ஜெட்டில் சுகாதாரத்துறை:
இந்தியா தனது ஜி.டி.பியில் 1.4 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்குச் செலவிடுகிறது. அதே வேலையில் மற்ற வளர்ந்து வரும் நாடுகளான இலங்கை 1.6 விழுக்காடும், பூட்டான் 2.5 விழுக்காடும் சுகாதாரத்துறைக்கு செலவிடுகின்றன. இருப்பினும் வரவேற்கத்தக்க அம்சம் கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்ஜெட்டுகான சுகாதாரத்துறை ஒதுக்கீடு சுமார் 40 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
புற்றுநோய், நீரிழிவு நோய், இருதயக் கோளாறு போன்ற முக்கிய நோய்களுக்கான சிகிச்சைகளும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ரவான்டா, எத்தியோப்பியா போன்ற மிகவும் பின்தங்கிய நாடுகள் கூட குறைந்த செலவில் சீரான சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உதாரணமாக எத்தியோப்பியா நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சம்பளத்துடன் கூடுதல் பணிக்கொடை தருகிறது. அத்துடன் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பள்ளிப்படிப்புடன் சுகாதாரம் சார்ந்த சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் மகப்பேறு சார்ந்த உயிரிழப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டது.
இது போன்ற பொருளாதாரம் சார்ந்து பின் தங்கிய நாடுகளில் வெற்றிபெற்ற முன் மாதிரி திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர்.