டெல்லி : ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி 2017ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் நிறைவேற்றப்பட்டது. இந்த வரி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்றன.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 1) ட்விட்டரில் கூறுகையில், “இந்திய பொருளாதாரத்தின் மைல்கல்லாக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளது. இதன் மூலம் வரி விதிப்பில் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் சாமானிய மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சகம் சார்பில் வெளியான ட்வீட்டில், “ஜிஎஸ்டி திட்டம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டுவருகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 25 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனர். மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடியாக உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.22,653 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 53,199 கோடி ஆகும். மேலும் செஸ் வருவாய் ரூ.9,265 கோடி ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 4 ஆண்டுகள் நிறைவு- ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு கௌரவம்!