டெல்லி: 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (மே.28) காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரோனா தடுப்பூசி, கரோனா நோய்களை எதிர்த்துப் போராட உதவும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைய விடுவிக்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பெருந்தொற்று காலத்தில் இந்த உபகரணங்கள் மீது வரி விதிப்பது கொடுமை எனவும் அவர் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்த அவர், மருத்துவ உபகரணங்களின் விலையையும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையையும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட வேண்டும்