டெல்லி: விமான பயண சேவைக் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது வரை விமானத்தில் பயணம் செய்ய குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் 2,600 ரூபாயில் இருந்து 7,800 ரூபாய் வரையும், அதிகபட்சமாக 8,700 ரூபாயில் இருந்து 24,200 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் 2,925 ரூபாயில் இருந்து 8,775 ரூபாய் வரையும், அதிகபட்சமாக 9,787 ரூபாயில் இருந்து 27,225 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக அனைத்து விதமான விமானக் கட்டணமும் 12.5 விழுக்காடு அளவு உயரும். கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 விழுக்காடும், மார்ச் மாதத்தில், அரசாங்கம் குறைந்தபட்ச கட்டணத்திற்கான வரம்பை 5 விழுக்காடும், மே மாதத்தில் 15 விழுக்காடும் ஒன்றிய அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டின் பயணத் தேவை அதிகரித்துள்ளதால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கரோனா நெறிமுறைகள் காரணமாக, உள்நாட்டு விமான சேவையில் 65 விழுக்காடு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 72.5 விழுக்காடாக ஒன்றிய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் கடிதம் மூலமாகப் பதிலளித்துள்ள ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே. சிங், "விமான கட்டணத்தை அரசு உயர்த்துவதில்லை.
விமான நிறுவனங்களின் செலவினம், எரிபொருள் விலை, பயணத்தேவை ஆகிய ஆராயப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. முக்கியமாக விமான எரிபொருள் பெரும் உயர்வைச் சந்தித்து வருகிறது. எனவே, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.