பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சீர் செய்யும் நோக்கில் இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாரத் பெட்ரோலியத்திடம் அரசு வைத்துள்ள மொத்த பங்குகளான 52.98 விழுக்காடு பங்குகளை விற்க அரசு முடிவெடுத்துள்ளது. சுமார், ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்நிறுவனத்தை தனியார் ஏலமெடுக்க கடந்த மே 2ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி நவம்பர் 16ஆம் தேதிவரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனலட்சுமி வங்கி நிர்வாகத்தில் குழப்ப நிலை