மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. இதனால் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
முதலில் ஏர் இந்தியா நிறுவனத்தில் 76 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இருப்பினும், ஏர் இந்தியா பங்குகளை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் 100 விழுக்காடு பங்குகளையும் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இருப்பினும், யாரும் ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஏலம் கேட்பதற்கான இறுதி தேதி மத்திய அரசு ஏற்கனவே பல முறை நீட்டித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஏலம் கேட்பதற்கான இறுதி தேதி மீண்டும் அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஏலத்திற்கான விதிமுறைகளை மாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏர் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, பணம் கையிருப்பு, கடன் ஆகியவற்றை சேர்த்து ஏல தொகை முடிவு செய்யப்படும். முன்னதாக, ஏர் இந்தியாவின் மொத்த கடன் சுமார் 60 ஆயிரம் கோடியாகும். இருப்பினும், அவற்றில் ரூ. 23 ஆயிரம் கோடிக்கு மட்டும் ஏலம் கேட்டும் நிறுவனம் பொறுப்பெற்க வேண்டும்.
மேலும், ஏலம் கேட்கும் தொகையில் 15 விழுக்காட்டை பணமாக மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்ற டாடா குழுமம் ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!