கடும் நிதிச்சுமை காரணமாக சிக்கித் தவித்த தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் மீது தடை நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இந்த வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.25,000-க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது என்ற தடை உத்தரவை கடந்த 17ஆம் தேதி பிறப்பித்தது.
இந்நிலையில் நிதிச்சுமையிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையாக சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ். வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க அரசு துரிதகதியில் முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று(நவ.25) அறிவித்தார்.
இதையடுத்து இந்த ஒரு மாதத் தடை தற்போது நீங்குவதாகவும், இந்த முடிவின் மூலம் 20 லட்சம் வாடிக்கையாளர்கள், நான்காயிரம் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கியை இதுபோன்ற மோசமான நிலைக்குத் தள்ளிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் லட்சுமி விலாஸ் வங்கி டி.பி.எஸ். வங்கி என்ற பெயரில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை முடக்கி, அடுத்த 30 நாள்களுக்கு வங்கி நிர்வாகத்தை நடத்த டி.என். மனோகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுத் துறை வங்கியான கனரா வங்கியின் முக்கியப் பொறுப்பில் (Non-executive chairman) இருந்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பு - உச்சத்தில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி