கரோனா தாக்கத்தால் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் சரிந்துள்ளது என சொன்னால் நம்புவீர்களா? ஆம். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவை விட, தற்போது உலகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் இந்தியப் பொருளாதாரம் சரிந்து வரும் சூழலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முடங்கியுள்ள நிலையில் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், மத்திய அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது.
அதன்படி அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது சாலையில் கடை போட்டு வாழும் சாலையோர கடை வியாபாரிகளுக்கு, கையில் பணம் புழங்க வேண்டும் என்பதற்காக, 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்புக் கடன் திட்டத்தை வழங்கியுள்ளார்.
இதனால் ஒரு சாலையோர கடை வியாபாரிக்கு 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும் என்றும் வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதற்குப் பின், விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: 48% இந்தியர்களின் வெளிநாட்டுத் திட்டங்கள் பாதிப்பு