கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கால் பல்வேறு துறைகளும் நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும் உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக, இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டது.
இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களைத் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்கின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிக்கின்றனர்.
இந்நிலையில் கோ-ஏர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நம்மால் சேவையைத் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே 3ஆம் தேதி வரை ஊழியர்கள் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 3ஆம் தேதிக்குப் பின் உள்ள நிலைமையைப் பொறுத்து சம்பளம் இல்லாத விடுப்பு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கோ-ஏர் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 5,500 ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் மட்டும் தற்போது பராமரிப்பு உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒரு பகுதி சம்பளமே வழங்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: விமான சேவை உண்டா இல்லை - குழப்பும் அரசு!