வணிகர்களுக்கு வர்த்தக சூழலை எளிமையாக்கும் விதமாக திவால் சட்டத்தின் கீழ் புதிய நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்கு மத்திய அரசு நிறுத்திவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு திவால் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 7,9,10 ஆகியவை தற்காலிகமாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான, அவசர சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதித்துறை வட்டாரத்தகவல் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாட்டின் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில் நிறுவனங்களை தற்காலிக தாக்கத்திலிருந்து விடுவிக்கும் விதமாக திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார். ஏப்ரல் 30க்குப்பின் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அபிக் பௌரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் இந்தியாவின் ரெமிட்டன்ஸ் 23 விழுக்காடு குறையும் - உலக வங்கி தகவல்