ஃபோர்ப்ஸ் இதழில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் இந்தியப் பணக்கார பட்டியலில் (Forbes India Rich List), இந்த ஆண்டும் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து பணக்கார தொழிலதிபர்களும் 8 விழுக்காடு சரிவைச் சந்தித்த நிலையில், இந்த ஆண்டு பட்டியலில் ஒன்பது தொழிலதிபர்களின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின், இந்தியப் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி(Mukesh Ambani) இந்த ஆண்டும் 51.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் மீண்டும் பணக்கார பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த கவுதம் அதானி (Gautham Adani), இந்த ஆண்டு 15.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அசோக் லேலண்ட்(Ashok Leyland) உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்கள் ( Hinduja Brothers) மூன்றாவது இடத்திலும் பலோன்ஜி மிஸ்ட்ரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹெச்சிஎல் (HCL) நிறுவனத்தின் தலைவரான சிவ் நாடார்(Shiv Nadar) 14.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன், இந்திய அளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த விப்ரோ (Wipro) நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிம் பிரேம்ஜி(Azim Premji) இந்த ஆண்டு பதினேழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து 12 ஆண்டுகளாக போர்ப்ஸ் இதழில் பணக்காரப் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யானை-மனித மோதலைத் தடுக்கும் கருவி!