இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும் இ-போர்டல், கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தொடர் தொழில்நுட்ப சிக்கல்களால் முடங்கிய தளம்
ஆனால் தொடங்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்களை இத்தளம் சந்தித்து வந்தது. இது குறித்து பயனர்களும் வரி செலுத்துபவர்களும் தொடர்ந்து புகார்களை முன்வைத்து வந்தனர்.
முன்னதாக இரண்டு நாள்கள் முற்றிலும் ஸ்தம்பித்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இத்தளம், நேற்று முன் தினம் (ஆக.21) மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இது குறித்து வருமானவரித்துறை சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.
வருத்தம் தெரிவித்த இன்ஃபோசிஸ்
அதனைத் தொடர்ந்து, இது குறித்து ட்வீட் செய்திருந்த இன்ஃபோசிஸ் இந்தியா வணிகப் பிரிவு, வருமானவரி தளத்தின் அவசரகால சரிபார்ப்பு பணிகள் முடிவுக்கு வந்ததாகவும், தளம் தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும், வரி செலுத்துபவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு தாங்கள் வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இத்தளம் தொடங்கப்பட்ட இரண்டு வார காலத்துக்குள்ளாகவே பயனர் ஒருவர் புகார் அளித்த நிலையில், ஜூன் 22ஆம் தேதி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முக்கிய அலுவலர்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்துப் பேசினார்.
அப்போது இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்களது சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும் எனவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான சலீல் பரேஷ் உறுதி அளித்தார்.
நிதி அமைச்சரிடம் விளக்கம்
இந்நிலையில், தற்போது தளம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்வது குறித்து சலீல் பரேஷிடம் மீண்டும் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் கோரியுள்ளார்.
இந்நிலையில், இன்று சலீல் பரேஷ் நிர்மலா சீத்தாராமனிடன் இது குறித்து விளக்கமளிக்கிறார். இத்தளத்தை வடிவமைப்பதற்கான உடன்படிக்கை 2019ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு, ஒன்றிய அரசு சார்பில் இதுவரை 164.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரோபோ தயாரிப்பில் இறங்கிய டெஸ்லா - எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு