கரோனா வைரஸ் பாதிப்பால் சிறு, குறு நிறுவனங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. மூலப் பொருட்கள் கிடைக்காதது, புதிய ஆர்டர்கள் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதால் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர புதிய முதலீடு செய்வதில் பயம், வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளையும் சிறு, குறு நிறுவனங்கள் சமாளிக்க வேண்டும். இதற்கிடையே ஊரடங்கு காரணமாக செயல்படாமல் இருக்கும் இரண்டு மாதங்களுக்குக் கட்டட வாடகை, மின்சார கட்டணம், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றையும் சிறு, குறு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் தொழிலாளர்கள் கிடைக்காததால் அவை தொடங்கப்படவில்லை. இதேபோல், ஏராளமான பெரு நிறுவனங்கள் முழு வீச்சில் உற்பத்தி பணியை தொடங்கவில்லை. தொடங்கப்பட்ட சில நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதனால் மீண்டும் மூடப்பட்டன. பெரு நிறுவனங்கள் பணியாற்றினால்தான் அவற்றின் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும்.
இது தவிர சில நிறுவனங்கள் ஜாப் வொர்க் என்று அழைக்கப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணிகளைச் செய்து வழங்குவர். தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அது போன்ற பணிகளும் கிடைக்கவில்லை என தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது மீண்டும் பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டாலும் கிட்டத்தட்ட 20 விழுக்காடு அளவுக்கு மட்டுமே வேலை நடைபெற்றுவருகின்றது.
தமிழ்நாட்டில் மட்டும் எட்டு லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ளன. பதிவு செய்யாமல், அமைப்பு சாரா குறுந்தொழில்கள் ஏராளமாக உள்ளன. இவை குறித்து பேசிய டான்ஸ்டியா எனப்படும் சிறு, குறு தொழில்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் வாசுதேவன், "அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளும் நடைபெறவில்லை. சில இடங்களில் தொழிற்சாலைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், தொழில்களுக்கு இது நீட்டிக்கும் பொது முடக்கம் போன்றதே. இதே நிலை அடுத்த 15 நாள்கள் நீடித்தால் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்" என்றார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகள் குறித்துப் பேசிய அவர், "நிதியமைச்சரின் அறிவிப்பு சிறு, குறு நிறுவனங்களுக்கு வந்து சேரவில்லை. ஏனென்றால், வங்கிளுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம் இருக்கிறது.
ஒரு சில இடங்களில் வங்கிகள் கடன் வசதி தர முன் வந்தாலும், பல இடங்களில் கடன் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில்கொண்டு சிறப்பு வங்கிகள் கடன் முகாம்கள் நடத்த வேண்டும்" என்று கூறினார்.
சிறு, குறு நிறுவனங்களின் பொருள்கள் கையிருப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தற்போது இது 75 விழுக்காடு வரை வழங்கப்படும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதனை 100 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைக்கின்றனர். இதன்மூலம் குறு நிறுவனங்களுக்கு கையில் கூடுதலாக பணம் கிடைக்கும்" என்று கூறினார்.
மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கான மத்திய அரசின் வரைவுத் திட்டம், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் விமர்சித்தார். இது குறித்து வாசுதேவன் கூறுகையில், "தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்களுக்கான வகைப்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை டான்ஸ்டியா சார்பாக நாங்கள் வரவேற்கிறோம்.
அதேநேரத்தில், நடுத்தர நிறுவனங்களின் வகைப்பாடு மாற்றியமைக்கப்படும் என அண்மையில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் 25 கோடி ரூபாய் விற்றுமுதல் (turnover) உள்ள நிறுவனமும் 150 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனமும் ஒரே அளவில் சிறு நிறுவனங்கள் பட்டியலில் வந்துவிடும்.
இதனால் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் நீர்த்துப்போகும். சீனாவிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசம்பிலிங் செய்பவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் செல்லும் என்பதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மாருதி விற்பனை சரிவு