ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு பிரிவைச் சேர்ந்த ஜியோ நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. சுமார் 39 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் அண்மையில் வோடஃபோன் - ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி நான்கே ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக், தற்போது ஜியோ நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் தரத்தை மேம்படுத்தி ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பதே லட்சியம் எனத் தெரிவித்துள்ள ஜியோ, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சவுதி அரேபியாவின் ஆரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது மிகப்பெரிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதிமுறைகள் WTO கொள்கையை மீறுகிறது - சீனா