யெஸ் வங்கி ஊழல் வழக்கில் டி.ஹெச்.எஃப்.எல். (DHFL) இயக்குநர்கள் தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோரை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலர்கள் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். யெஸ் வங்கி 2018ஆம் ஆண்டு டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்துக்கு மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
அதேபோல, தீரஜ் வதாவன் இயக்குநராக உள்ள ஆர்.கே.டபிள்யூ. (RKW) டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.750 கோடி கடன் அளித்தது. இதற்கு ரூ.600 கோடி வரையில் முதலீடாக கையூட்டு கைமாறியுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இதற்கிடையில் வதாவன் சகோதரர்களை ஒப்படைக்குமாறு அமலாக்கத் துறை வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை வழக்குரைஞர் கூறுகையில், “அமலாக்கத் துறை அலுவலர்கள் வதாவன் சகோதரர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கலாம்” என்றார்.
வதாவன் சகோதரர்களை மத்திய புலனாய்வு அமைப்பு கைதுசெய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது அவர்களை விசாரிக்க அமலாக்கத் துறையும் நோட்டீஸ் அளித்துள்ளது.
இதனால் அவர்கள் அமலாக்கத் துறையினரால் கைதாக வாய்ப்புள்ளது. யெஸ் வங்கி முறைகேடு வழக்கில், தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோர் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் குற்றஞ்சாட்டப்பட்டு, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: 10 லட்சம் கோடியைக் கடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு