டெல்லி: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய ட்ரோன் விதிகள் 2021, தொழில் துறை நிறுவனங்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் வகையில் உள்ளது.
முதலில் உளவு பார்ப்பதற்காக மட்டும் தான் ட்ரோன் அல்லது சிறிய ரக வானூர்தி தயாரிக்கப்பட்டது. பிற்காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், ட்ரோனின் தேவைகளும் விரிவுபடுத்தப்பட்டன.
ட்ரோன் பயன்பாடுகள்
அதற்கு அடுத்தபடியாக, படப்பிடிப்புகளுக்கு ட்ரோன் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. சொல்லப்போனால், தற்போதைய திருமண வீடுகளில் ட்ரோன் இல்லாமல் காட்சிகளைப் பதிவு செய்வது மரியாதை குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது.
அந்த அளவிற்கு ட்ரோன் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், ட்ரோனை மிக மிக அவசியத் தேவைகளுக்கு பயன்படுத்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன் நீட்சியாக ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண் துறைகளில், பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மனித உழைப்பால் செய்யக்கூடிய வேளாண் துறை சார்ந்த வேலைகளை, ட்ரோன் கையாண்டு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
இவ்வாறாக ட்ரோன் தனது பாதையில் வளர்ந்து வந்தாலும், அதற்கான கட்டுப்பாடுகள் அதன் வளர்ச்சிக்கும், வணிக ரீதியிலும் அவை செயல்படுவதற்கும் பெரும் தடையாக இருந்தது.
புதிய ட்ரோன் விதிகள் என்ன சொல்கிறது
இதுவரை இருந்து வந்த ட்ரோனுக்கான தனித்துவமான அடையாள எண்ணுக்கான ஒப்புதலுக்கு, இனி காத்திருக்க தேவையில்லை. புதிய ட்ரோன்களின் ஒப்புதலுக்கு இதற்கு முன்பு 25 படிவங்கள் நிரப்பவேண்டி இருந்தது. அவை தற்போது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வணிக ரீதியிலான ட்ரோன்களுக்கான, 10 ஆண்டுகள் ரிமோட் பைலட் உரிமத் தொகை 3 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் எங்கெல்லாம் இயக்க அனுமதிக்கலாம் என புதிய டிஜிட்டல் வான்வழி நெறிமுறைகள் அடுத்த 30 நாட்களில் வெளியிடப்பட உள்ளன. பச்சை மண்டலங்களாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் 400 அடி உயரம் வரை ட்ரோன்களை இயக்க எந்த அனுமதியும் தேவையில்லை.
மஞ்சள் நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விமானநிலைய சுற்றுவட்டாரங்களில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே ட்ரோன்களை இயக்கிக்கொள்ளலாம்.
வணிகப்பயன்பாடு இல்லாத சிறிய ரக ட்ரோன்களுக்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை. இதுவரை 300 கிலோ எடையுள்ள பொருட்களை, சுமந்துசெல்ல அளிக்கப்பட்ட அனுமதி, தற்போது 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ட்ரோன்கள் இயக்கத் தடைகள் இல்லை. மேலும், சரக்கு கையாள்வதற்கென பிரத்யேக ட்ரோன் வழித்தடமும் வடிவமைக்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை அள்ளித் தரும் ட்ரோன்
"விவசாயம், சுரங்கம், உள்கட்டமைப்பு, கண்காணிப்பு, அவசரகால பதில், போக்குவரத்து, புவி - இடவியல் வரைபடம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் என கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் இந்த விதிகள் மூலம் பொருளாதாரத்தில் பெரிய நன்மைகளை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஐஐடி கான்பூரின் இயக்குநர் அபய் கரந்திகர் கூறியுள்ளார்.
அரசின் இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையால், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ட்ரோன் சந்தை
இந்திய ட்ரோன் சந்தை 2026ஆம் ஆண்டில் 1.8 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ச்சி காணும் என கணக்கிடப்பட்டுள்ளது. ரிசர்ச் ஆண்ட் மார்க்கெட்ஸ் வெளியிட்ட பகுப்பாய்வின் படி, இதன் ஆண்டு வளர்ச்சி 14.61 விழுக்காடாக இருக்கும்.
இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கான பியூண்ட் விஷுவல் லைன் ஆஃப் சைட் (பிவிஎல்ஓஎஸ்) ட்ரோன் சோதனை ஓட்டம், த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (TAS) மற்றும் UDAN (உதே தேஷ் கா ஆம் நாகிரிக்) பைலட் மூலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பெங்களூருவின் புறநகரில் உள்ள கவுரிபிதானூரில் 15 கி.மீ., சுற்றளவில் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதி செய்தது.
மருத்துவ சேவையில் ட்ரோன்கள்
இந்த சோதனைக்கு மெட்காப்டர் எக்ஸ் 4, மெட்காப்டர் எக்ஸ் 8 ஆகிய இரு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்திய ட்ரோன் நிறுவனமான த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸால் உருவாக்கப்பட்டது.
வெளியான தகவல்களின்படி, இது சராசரியாக 7 நிமிடங்களில் 3.5 கிமீ தூரம் பறக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு வெவ்வேறு ட்ரோன்களும் அதிகபட்சமாக 2 கிலோ வரை சுமைகளை வைத்து சோதிக்கப்பட்டன.
மெட்காப்டர் எக்ஸ் 4 சுமார் 3.5 கிலோ எடை கொண்டது. இவை ஒரு கிலோ வரை சுமைகளை வைத்திருக்க முடியும்.
அதே நேரத்தில் மெட்காப்டர் எக்ஸ் 8, 5.5 கிலோ எடையுள்ளதாகவும், 2 கிலோ வரை சுமைகளை எடுத்துச்செல்லும் ஆற்றல் படைத்தது என்று கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகளின்படி, இந்த இரண்டு ட்ரோன்களும் சிறிய ஆளில்லா விமான அமைப்பு என வகைப்படுத்தப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.