கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தது. ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால், அரசின் வருவாய் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை சமீபத்தில் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில், வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்தாண்டு மத்தியில் லிட்டருக்கு 3 முதல் 6 ரூபாய் வரை உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.
பெட்ரோல் மீதான கலால் வரியை 18 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரியை 12 ரூபாயாகவும் உயர்த்துவதற்காக அரசு நாடாளுமன்றத்திடம் மார்ச் மாதம் அனுமதி பெற்றது. ஆனால், விலையேற்ற நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்படவில்லை. இந்த வரி உயர்வின் மூலம் உலகத்தில் அதிகளவு வரி விதிக்கப்படும் பொருளாக பெட்ரோல் மாறும்.
இதையும் படிங்க: சரிவில் தொடங்கி ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!