குறைந்த விலையில் அட்டகாசமான வசதிகளை வழங்குவதால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் பெருமளவு இருக்கிறது. இருப்பினும், இந்திய-சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக உருவாகியுள்ள பதற்ற நிலை காரணமாக சீன நிறுவனங்களைப் புறக்கணிக்கும் மனநிலை இந்தியாவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் இருப்பு ஜூன் மாதம் 81 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடகக் குறைந்துள்ளதாக கவுண்டர் பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில், இந்தியாவில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை என்பது சுமார் 51 விழுக்காடு குறைந்துள்ளது.
அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வெறும் 1.8 கோடி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதம் ஒரு ஸ்மார்ட்போன்கூட விற்பனையாகவில்லை.
சீன நிறுவனமான சியோமி அதிகபட்சமாக 29 விழுக்காடு சந்தையைத் தன்வசம் கொண்டுள்ளது. அதேபோல, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற சீன நிறுவனங்களான ரியல்மி 11 விழுக்காடும், ஓப்போ ஒன்பது விழுக்காடும் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் சியோமி 30 விழுக்காடும் ரியல்மி 14 விழுக்காடும் ஓப்போ 12 விழுக்காடும் சந்தை இருப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் 16 விழுக்காடுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம், இந்த காலாண்டில் 26 விழுக்காடுடன் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் ப்ரீயமியம் (ரூ.30 ஆயிரத்திற்கு மேல்) செக்மென்டில் தொடர்ந்து சீனாவின் ஒன்பிளஸ் நிறுவனமும், அல்டிரா ப்ரீயமியம் (ரூ.45 ஆயிரத்திற்கு மேல்) செக்மென்டில் ஆப்பிள் நிறுவனமும் முன்னிலையில் உள்ளன.
கரோனா பரவல் காரணமாக புதிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலும், அதிகரிக்கும் சீன எதிர்ப்பு மனநிலையுமே சீன நிறுவனங்களின் சரிவுக்குக் காரணமாக இருக்கும் என்று கவுண்டர் பாயின்ட் நிறுவனத்தின் மூத்த அலுவலர் பிரச்சீர் சிங் தெரிவித்தார்.
மேலும், கரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் கடைகளைத் தவிர்த்து, ஆன்லைன் மூலமே ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகின்றனர். இதனால் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள்