சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசால் உலக மக்கள் அனைவருமே பீதியில் உள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வைரஸ் கோழி போன்ற பறவைகள் மூலம் பரவுவதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக சில காணொலிகளும் வைரலாகப் பரவிவருகின்றன.
இதனால் அசைவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் எனவும் அந்தக் காணொலி மூலம் செய்தி வந்தது. அசைவ பிரியர்களின் முதன்மையான விருப்ப உணவு சிக்கன். தற்போது சிக்கன் சாப்பிடுவதை அசைவ பிரியர்கள் தவிர்த்துள்ளதால், கோழி விலை குறைந்துகொண்டு வருகிறது எனக் கோழி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய கோழி உற்பத்தியாளராக உள்ள கோத்ரேஜ் அக்ரோவெட் நிர்வாக இயக்குநர் யாதவ், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு 40 சதவிகிதம் விற்பனை பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாரம் ஒன்றிற்கு பத்து லட்சம் கோழிகள் விற்பனை ஆகிவந்த நிலையில், இந்த வாரம் வெறும் ஆறு லட்சம் கோழிகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோழி விற்பனை குறைந்தது மட்டும் அல்லாமல் கோழியின் விலையும் சரிந்துள்ளது. வெங்கிஸ் அண்ட் சுகுணா உணவகம் அளித்துள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒருவர் மாதத்திற்கு 4.5 கிலோ சிக்கன் சாப்பிடுகிறார். இதுவே உலகளவில் 11 கிலோவாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில்தான் அதிகளவு சிக்கன் சாப்பிடுகிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக ஒருவர் மாதம் ஒன்றிற்கு 13 கிலோ சிக்கன் சாப்பிடுகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்குதலால் சிக்கன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்துள்ளது என கோழி விற்பனை நிறுவனங்கள் கவலை தெரிவித்துவருகின்றன.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: கோழி விற்பனை சரிவு!