கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பெரிய அளவில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட்டமாக செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், பொருளாதாரம், மக்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பணிகள் தொடங்கி பேருந்து, திரையரங்கு, கோயில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடற்கரைக்கு மக்கள் செல்ல இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அதனை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகரின் முக்கிய கடற்கரை பகுதிகளான மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்டவற்றில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடுவர். அதனால், தேனீர், விரைவு உணவகங்கள், மீன் கடைகள், சிறு உணவகங்கள், கையேந்தி பவன்கள், மக்காச்சோளம், ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிக்கடைகள் விற்பனை சூடு பிடிக்கும்.
ஆனால், கடந்த எட்டு மாதங்களாக கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லாததால், அதனை நம்பியிருக்கும் தாங்கள் வருவாய் இன்றி தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் போது கடற்கரையை திறப்பதில் என்ன பிரச்சனை என உயர் நீதிம்னறம் எழுப்பிய கேள்வியையே அவர்களும் எழுப்புகின்றனர்.
சிறு வியாபாரிகளின் நன்மை கருதி கடற்கரைக்கு மக்கள் வருகைக்கு தேவையான நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மீனவர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கும் கடற்கரைதான் வாழ்வு எனும் சிறு வியாபாரிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
இதையும் படிங்க: ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ஃபிளிப்கார்ட்!