நாடு முழுவதும் ஒரே வரியைப் பின்பற்றும் நோக்கில் 2016ஆம் ஆண்டு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரி வருவாய் குறைந்தால், அதை மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீட்டு நிதியாக அளிக்கும் என்று உறுதி அளித்திருந்தது.
2017-18, 2018-19 ஆகிய நிதியாண்டுகளில், நான்கு மாதங்களுள் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது. ஆனால், 2019-20ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையால் இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதமானது. இதுகுறித்து, மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிட்டதையடுத்து ரூ. 35,298 கோடி வழங்கப்பட்டது.
"ஒருங்கிணைந்த செஸ் வரியிலிருந்து ரூ. 35 ஆயிரம் கோடி இரண்டு தவணைகளில் விரைவில் வழங்கப்படும். முதல் பரிவர்த்தனையில் அக்டோபர் - நவம்பர் மாதத்திற்கான இழப்பீடு வழங்கப்படும்" என நிதித்துறை அமைச்சக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசு பல்வேறு தவணைகளில் இதுவரை 2.11 லட்சம் கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'