வரும் 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளது. இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நலன்காக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சி.ஐ.டி.யூ. அமைப்பின் மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதன்படி, அவர் பேசியதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.
தனியார்மயம்
அரசின் தீவிர தனியார்மயக்கொள்கை குறித்து அவர் பேசுகையில், "தொழில் வளர்ச்சியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும். தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகவே செயல்பட்டுவரும் அரசு, இந்த பட்ஜெட்டிலும் அதைத்தான் செய்யும். தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது, தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவருகிறது. மக்களிடமிருந்து பணம் உறிஞ்சப்படுவதால், அவர்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
அரசின் திட்டங்கள்
அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து பேசிய அவர், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் மூலம் மக்களுக்கு வருவாய் ஏற்பட்டு, பொதுப்பணிகளும் நிறைவடைய வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'மோடி 2.0' அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!
வரித் திட்டங்கள்
வரித் திட்டங்கள் குறித்து பேசிய அவர், "அரசு தொழிலாளர்களுக்கு வரியை குறைக்க மறுக்கிறது. குறைந்த வருமான ஈட்டுபவர்களிடம் அதிக வரி வசூலிக்கிறது, ஆனால் பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் வழங்குகிறது. முதலாளிகளுடைய வருமானத்தில் அரை சதவிகிதம் கூடுதலாக வரி வசூலித்தால் நாட்டில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.
தொழிலாளர் நலன்
தொழிலாளர்கள் நலன் குறித்து கருத்து தெரிவித்த அவர், "தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும் நிலை உள்ளது. தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரமற்ற சூழல் உருவாகியுள்ளது. முதலாளிகள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்லாம்.
இதனால், கடந்த 120 ஆண்டுகளாக தொழிலாளிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழல் மாற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்