பெங்களூரு (கர்நாடகம்): வாடகை ஸ்கூட்டர் நிறுவனமான பவுன்ஸ் (bounce), பிப்ரவரி 2021க்குள் 4000 மின்சார இருசக்கர வாகனங்களை இணைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பெரு நகரங்களில், பவுன்ஸ் நிறுவனம் 50% விழுக்காடு மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பவுன்ஸ், 2021ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள், அனைத்து பவுன்ஸ் இருசக்கர வாகனங்களும் மின்சாரத்தால் இயங்கும்படியான திட்டத்தினை வகுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்த 4000 மின்சார இருசக்கர வாகனங்கள் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல், மின்சார வாகனம் தயாரிக்க தேவையான உதிரிபாகங்களை, அதற்குரிய நிறுவனங்களிடம் இருந்து பெற்று, 10 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்களை கட்டமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சில இடங்களில் கரோனா தொற்றின் தாக்கத்தினால் தடைசெய்யப்பட்ட சேவைகளை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.