பெங்களூரு: கரோனா தடுப்பூசி கோவாக்சினுக்கு அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் விலை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் விலை ஒரு டோஸ் மத்திய அரசுக்கு ரூ.150க்கும், மாநில அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200க்கும் வழங்கப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு ரூ.1,100 முதல் ரூ.1,500 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசியின் புதிய விலை பட்டியலை வெளியிட்டது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், மத்திய அரசுக்கு ரூ.150க்கும் கொடுக்கவுள்ளதாக நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த விலையேற்றத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டன குரல்கள் கிளம்பியுள்ளது.
இச்சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது கோவிஷீல்டை விட தங்களின் தடுப்பூசிக்கு விலை அதிகமாக நிர்ணயம் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.