கரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 10.47 விழுக்காடு ஏற்றம் கண்டது.
இதன் மூலம் சர்வதேச அளவில் மிகவும் மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் கரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய் தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக உலகில் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, தற்போது 1.76 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.
கரோனா காலத்தில் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, தற்போது 1.84 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக மாறிய ஆப்பிள் மாறியுள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக் கூறுகையில், "ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகிய இரு பிரிவுகளிலும், நாங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளோம்.
கரோனா போன்ற நெருக்கடியான காலங்களிலும், எங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்கின்றன என்பதற்கு இது ஒரு முக்கிய சான்றாகும்" என்றார். ஏப்ரல் முதல் ஜூன் வலையிலான காலாண்டில், ஐபோன் விற்பனை மூலம் 26.4 பில்லியன் டாலர்களையும், ஐபாட் மூலம் 6.6 பில்லியன் டாலர்களையும் ஆப்பிள் நிறுவனம் வருவாயாகப் பெற்றுள்ளது. அதேபோல, ஆப்பிள் நிறுவனத்தின் கணினி பிரிவான மேக் மூலம் 7.1 பில்லியன் டாலர்கள் வருவாயை ஆப்பிள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது!