இந்திய சில்லறை வர்த்தக சந்தையை பிடிக்க பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் ஒரு டிரில்லியன் டாலர்கள் இந்திய சந்தையின் மதிப்பாகும் என கூறப்படுகிறது.
கரோனா காரணமாக ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்திய சில்லறை வர்த்தக சந்தையைப் பிடிக்க அமேசான் நிறுவனம் முயன்று வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் கடைகளுடன் சில்லறை வர்த்தக சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக ரிலையன்ஸ் குழுமம் திகழ்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியை அளிக்கும் வகையில், கடந்தாண்டு ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 விழுக்காடு பங்குகளை ரூ.1,430 கோடிக்கு அமேசான் வாங்கி இருந்தது.
இந்த ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனம், சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் 7.2 விழுக்காடு பங்குகளை கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால், ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சுமார் 5 விழுக்காடு பங்குகளை மறைமுகமாக அமேசான் வைத்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ஃப்யூச்சர் குழுமத்தின் மொத்த ரீடெய்ல் பிரிவை ரூ.24,713 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை விற்கும் முன், அமேசானிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் (right of first refusal) என்று போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஃப்யூச்சர் குழுமம் விற்பனை செய்துள்ளதாக அமேசான் குற்றஞ்சாட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரிலையன்ஸ் - ஃப்யூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தார். இந்த முடிவை அமேசான் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
மேலும், இந்தப் பிரச்னையை தீர்க்க மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்தக் குழுவில் அமேசான் நிறுவனத்தில் இருந்து ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒருவரும், வெளியாள் ஒருவரும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பரிவர்த்தனை தொடர்பான பிரச்னையை இந்தக் குழு 90 நாள்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூடப்படும் ஐசிஐசிஐ வங்கி