ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு யுபிஐ (UPI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் செயலிகளில் கூகுள் பே (Google Pay) மிகவும் புகழ்பெற்றது. இருப்பினும், கடந்த சில நாள்களாக கூகுள் பே செயலி முறையான அனுமதியைப் பெறாமல் இயங்குவதாகவும், இதனால் அந்தச் செயலியில் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது ஏற்படும் பிரச்னைகளை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீர்க்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவிய இத்தகவலுக்கு கூகுள் பே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் பே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "கூகுள் பே செயலியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டது இல்லை என்ற தகவல் தற்போது பரவிவருகிறது.
ஆனால் இது முற்றிலும் தவறான தகவல், நீங்கள் தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்தின் (NPCI) இணையதளத்தில் இதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். கூகுள் பே அங்கீகரிக்கப்படாதது என்று ரிசர்வ் வங்கி கூறவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சமர்பித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்திலும் இதைக் குறிப்பிடவில்லை.
மேலும், கூகுள் பே முற்றிலும் சட்டத்திற்குள்தான் செயல்படுகிறது. யுபிஐ வழியாகப் பணம் செலுத்தும்போது, வங்கிகளுக்குத் தொழில்நுட்பச் சேவை வழங்கும் செயலியாகவே கூகிள் பே செயல்படுகிறது. யுபிஐ மூலம் நாட்டில் இயங்கும் அனைத்துச் செயலிகளுமே இவ்வாறுதான் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பேமென்ட் ஆபரேட்டர்களாக செயல்படுவதில்லை.
கூகுள் பே செயலியில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. பரிவர்த்தனையின்போது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் கூகுள் பே செயலியில் இருக்கும் சேவை மையத்தை (Customer Care) தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
கூகுள் பே குறித்து பரவிய தவறான தகவல்களுக்கு தேசிய பண பரிவர்த்தனை கழகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. கூகுள் பே செயலில் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீர்க்க முடியும் என்றும் அக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் - எச்சரிக்கை தேவை!