கரோனா காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமான துறை உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து இன்னும் தொடங்காத நிலையில், உள்நாட்டு சேவைகளுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சம், பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக விமானங்களில் பயணிக்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் முன்னணி விமான நிறுவனங்கள்கூட நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், குறைந்த விலையில் விமான சேவையை வழங்குவதில் பெயர்பெற்று விளங்கும் ஏர்ஏசியா நிறுவனம் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் மூன்று புதிய ஏர்பஸ் A320 Neo விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு ஏர்பஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் முதல் ஏர்பஸ் A320 Neo விமானத்தை இந்தாண்டு அக்டோபர் மாதமும் இரண்டாவது விமானத்தை இம்மாத தொடக்கத்திலும் பெற்றோம்.
மேலும் மூன்றாம் விமானம் டிசம்பரிலும், நான்கு மற்றும் ஐந்தாவது விமானங்களை வரும் ஜூன் மாதமும் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாடா நிறுவனமும் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமும் இணைந்து ஏர் ஏசியா என்ற பெயரில் விமான சேவையை வழங்கிவருகிறது. தற்போது அந்நிறுவனத்திடம் இரண்டு ஏர்பஸ் A320 Neo உட்பட 30 விமானங்கள் உள்ளன. முன்னதாக, நவம்பர் 17ஆம் தேதி ஏர்ஏசியா இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரம் சுமார் இரண்டு மாத காலம் விமான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து மே 24ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ’அதானிக்குக் கடன் வழங்கினால், எஸ்பிஐ பசுமைப் பத்திரங்களை விற்போம்’ - பிரான்ஸ் நிறுவனம்