விமான பயணத்தின்போது லக்கேஜுகளை கையாளுவதே நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த கரோனா காலத்தில் விமான பயணம் என்பதே பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாறியுள்ள நிலையில், லக்கேஜுகளை கையாளுவது இரட்டிப்பு தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், பயணிகளை கவர அவர்களின் வீடுகளுக்கே சென்று லக்கேஜை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை ஏர்ஏசியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு முன்பதிவு செய்துகொள்ளும் பயணிகளின் வீடுகளுக்கே சென்று லக்கேஜுகள் பெற்றுக்கொள்ளப்படும்.
மேலும், விமான பயணம் முடிந்து அவர்கள் எங்கு தங்குகிறார்களோ அந்த இடத்திற்கு அவர்களின் லக்கேஜுகளை ஏர்ஏசியா சென்று சேர்க்கும். இதன் மூலம் பயணிகள் விமான நிலையத்திலுள்ள பொருள்களை தேவையின்றி தொடத் தேவையில்லை.
இந்த சேவை தற்போது பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அறிகமுப்படுத்தப்படவுள்ளதாகவும், மிக விரைவிலேயே மும்பையிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு வழி சேவைக்கு, அதாவது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கோ அல்லது விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கோ ரூ. 500 வசூலிக்கப்படும் என்றும் ஏர்ஏசியா அறிவித்துள்ளது. அதன்படி 'AirAsia FlyPorter' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் இரு வழி சேவைக்காக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? - இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!