நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனையும் தனியாருக்கு விற்கும் முடிவை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான முதலீட்டாளர்களை மத்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியத் தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நிர்மலா, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை வாங்குவதற்கு பல்வேறு முதலீட்டாளர்கள் தீவிர ஆர்வம் காட்டிவருவதாகவும், வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் முழுமைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி நிதி வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பதாக நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதார நிலை குறித்து மத்திய இணையமைச்சரின் பகீர் விளக்கம்