புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு மற்றும் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 1.47 லட்சம் ரூபாய் ஏஜிஆர் நிலுவை முழுவதையும் அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்டது. ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 3,500 கோடி, ஏர்டெல் 10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண நிலுவையை செலுத்துவதற்கு ஏதுவாக விதிகளை தளர்த்த வேண்டும். குறைந்த கட்டணத்தில் கடன் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஏஜிஆர் கட்டணத்தை அடிப்படை விலையில் நிர்ணயிக்க வேண்டும்.
இந்த துறைக்கு வங்கிகள் கடன் வழங்க தயங்கும் நிலையில், அரசு இத்துறை தொடர்ந்து இயங்க ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என தெரிவித்துள்ளன.
இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய தொலைத்தொர்பு துறை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த 20 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விதித்துள்ளது.
இதையும் படிங்க: சென்செக்ஸ் 2,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு...எப்போது மீளும் பங்குச்சந்தை!