ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் "நெறிசார்ந்த ஊழியர்கள்(Ethical Employees )" என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், "லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும், இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி சலில் பரேக் (Salil Parekh) மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் (Nilanjan Roy) இருவரும் கணக்கு வழக்குகளில் முறையற்ற வழிகளை கையாள்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை அளிக்கத் தயார் என்றும், இந்தப் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றும் நெறிசார்ந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விசில் ப்ளோவர் குற்றச்சாட்டு (Whistleblower Complaint) குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகனி (Nandan Nilekani) தெரிவித்துள்ளார்.
இந்த விசில் ப்ளோவர் குற்றச்சாட்டால் இன்ஃபோசிஸ் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வந்தன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், பங்குச்சந்தை முடிவின் போது இன்ஃபோசிஸ் பங்குகள் 17 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் இந்தக் குற்றச்சாட்டால் நிறுவனத்திற்கு கெட்டப்பெயர் உருவாகியதோடு, இவ்விவகாரம் பங்குச் சந்தையில் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விசில்ப்ளோவர் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்!